

முதுகில் கட்டியுடன் அவதிப்படும் ஓசூர் சிறுவன் தனுஷுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் மத்திகிரி தரப்பு குருபட்டியைச் சேர்ந்த பவளக் கொடியின் மகன் தனுஷ். முதுகுப்பகுதியில் உள்ள கட்டியால் இந்த சிறுவன் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாக பத்திரிகை களில் செய்தி வெளியானது. இதையடுத்து, சிறுவன் தனுஷுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை செயலருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
முதல்வரின் உத்தரவுப்படி சிறுவன் தனுஷை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், தனுஷுக்கு பிறவியில் ஏற்படும் ‘கான்ஜெனிடல் மெலனோசைடிக் ஹிமென்ஜியோமா’ நோய் பாதிப்பு இருப்பதாகவும், இதற்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தனர்.
சிறுவனின் தாய் பவளக் கொடியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனுஷுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். தனுஷ் மற்றும் அவரது தாயை சென்னைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளிக்கவும், சிகிச்சை முடியும் வரை அரசு செலவில் இருவரும் பாதுகாப்பாக தங்கவும் ஏற்பாடு செய்யுமாறு சுகாதாரத்துறை செயலருக்கும் முதல்வர் உத்தரவிட் டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.