Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை ஆராய்கிறது திமுக

தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ள தொகுதிகள் எவை? தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பாடுகள் மக்களுக்கு திருப்தியளித்துள்ளதா என்பது குறித்து, தி.மு.க., சார்பில் மூன்று விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிக்கையின் அடிப்படையில், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வை நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக பங்கேற்றுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், 22 இடங்களில் தி.மு.க., போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோல், 2004ல் 16 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என்று, தி.மு.க., பொதுக்குழுவைக் கூட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, மூன்று குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., மீதான மக்களின் எண்ணங்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த பரவலான கருத்து, விலைவாசி உயர்வு, தி.மு.க., எம்.பி.,க்களின் செயல்பாடுகள், வரும் தேர்தலில் பழைய எம்.பி.,க்களுக்கான வெற்றி வாய்ப்பு, ஆளுங்கட்சி மீதான மக்களின் நிலைப்பாடு, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து, ஆய்வுகள் நடந்துள்ளதாக, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகள் தொடர்பாக டிசம்பர் இறுதி வாரத்தில், மூன்று அறிக்கைகளை தி.மு.க., தலைமையிடம் சம்பந்தப்பட்ட தனியார் அமைப்புகள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களையும் முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x