

உளுந்தூர்பேட்டை அருகே காடுகளில் தண்ணீர் பஞ்சத்தால் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. இதனால் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாதூர் கிராமத்தில் தொடங்கி வேப்பூர் கூட்டுரோடு வழியாக பெரியநெசலூர், அடரி, அரசங்குடி, சின்னசேலம் வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை 55 கிலோ மீட்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இதேபோன்று மங்களூர் ஒன்றியத்தில் நாங்கூர், கண்டமத்தான் உட்பட சுமார் 20 கிராமங்களை சுற்றியும் வனபகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள், மயில்கள், எறும்பு தின்னிகள், காட்டுபன்றிகள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. இங்குள்ள விலங்குகளின் உணவு தேவைக்காக வனத்துறை மூலம் ஆச்சான், நாவல், புக்கன், வேம்பு, மருது ஆகிய மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் குடிநீர் தேவைக்காக மழைகாலங்களில் பெருகெடுத்து வரும் ஓடைகளில் தண்ணீரை சேமிக்க சுமார் 18 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால், வனத்தில் வாழும் வன விலங்குகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் வன உயிரினங்கள் குடிநீர் தேடி காட்டை விட்டு அருகில் உள்ள கிராமங்களை நோக்கி வருகின்றன. இவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுகின்றனர். பெண்ணாடத்தைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் மெய்யப்பன் கூறியதாவது:
வனவிலங்குகள் காடுகளில் இருந்து தண்ணீர் தேவைக்காக வெளியே வருகின்றன. இவைகளை சிலர் வேட்டையாடுகின்றனர். இதனால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.