6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தம்: 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் தவிப்பு
தமிழகத்தில் 12 ஆயிரம் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 2 லட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 60 வயதைக் கடந்த 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட உறுப்பினர்க ளுக்கு தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக மாதந்தோறும் தலா ரூ.1000 ஓய்வூதி யம் வழங்கப்பட்டுவந்தது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட நெசவாளர் களுக்கு கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி உள்ள நெசவாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன (சி.ஐ.டி.யூ) மாநில பொதுச்செயலர் இ.முத்துக்குமார் கூறியது: பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக, புடவைகளை நெய்யும், கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களில் பெறும் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, 8 சதவீத நிதி குழு காப்பீட்டிலும், 2 சதவீத நிதி, சிறுசேமிப்பிலும் வைக்கப்படு கிறது. நெசவாளர் 60 வயதை அடையும்போது, பிடித்தம் செய்யப்பட்ட 8 சதவீத ஊதியத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்தே, இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது ஒன்றும் அரசின் நிதி இல்லை. அரசு, இந்த நிதியை நெசவாளர்களுக்குத் தானமாகவும் வழங்கவில்லை. நெசவாளர்களிடம் இருந்து பெற்ற நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியை வழங்கக்கூட அரசு தயங்குகிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். காலதாமதமின்றி உடனே ஓய்வூதிய நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது:
“அரசு சார்பில் ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஓய்வூதிய நிதி வழங்கப்படும். அரசின் நிதி கிடைக்கும்வரை, அந்தந்த கூட்டுறவுச் சங்கங்கள், அதன் வருவாய் நிதியிலிருந்து ஓய்வூதியத்தை பயனாளிகளுக்கு வழங்கும். அரசின் நிதி கிடைத்த வுடன், அது கூட்டுறவுச் சங்கத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். போதிய வருவாய் இல்லாத கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வாறு நெசவாளர்களுக்கு ஓய்வூதி யத்தைத் தொடர்ந்து வழங்க முடிவதில்லை. அதனால்தான் இப்பிரச்னை எழுந்துள்ளது. அரசின் நிதி கிடைத்தவுடன் இப்பிரச்னை தீரும்” என்றார்.
