

விஐபி தொகுதியாக ஆர்.கே.நகர் மாறிய பின்னும், அத்தொகுதியில் இடம்பெற்றுள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அடிப்படை வசதிகள் இன்றியும், மேம்படுத்தப்படாமலும் இருப்பதாக மீனவர் சங்கங்களும், மீன் வியாபாரிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2015-ல் நடைபெற்ற இடைத் தேர்தலிலும், அடுத்து வந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா போட்டியிட்டதால், அந்த தொகுதி விஐபி அந்தஸ்தைப் பெற்றது. இந்நிலையில், அத்தொகுதியில் இடம்பெற்றுள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படாமலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமலும் இருப்பதாக மீனவ சங்கங்களும், மீன் வியாபாரிகளும், தொழிலாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:
காசிமேடு துறைமுகத்தில் 1500 விசைப் படகுகளும், 10 ஆயிரம் பைபர் படகுகளும், 1500 கட்டுமரங்களும் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 150 டன் மீன்கள் கையாளப்படுகின்றன. தினமும் சுமார் ரூ.15 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மீனவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் இல்லை. எங்கும் அசுத்தமாக, துர்நாற்றம் வீசி வருகிறது. மின் விளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. போதை வஸ்துகள் தடையின்றி கிடைக்கின்றன. போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீன் வியாபாரிகள் வெயிலில் வாடும் நிலை உள்ளது. மீன் ஏல வளாகம் கேட் டால், மீனவர் கோரிக்கையை நிராகரித்து, சில்லறை வியாபாரிகள் பயன்படுத்த உகந்த வளாகத்தை, கடலில் இருந்து வெகு தொலைவில் கட்டி, பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். விற்காத மீன்களை அங்கேயே, ஐஸ் பெட்டியில் வைத்து, அடுத்தநாள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை.
இங்கு மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்றுமதி நுணுக்கங்களை அரசு கற்றுத்தரவில்லை. கேரளம், கர்நாடகம், கோவாவுக்கு லாரிகள் மூலமாக மீன்களைக் கொண்டு சென்று, ஏற்றுமதியாளர்களிடம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மீனவர்களுக்கு நல்ல விலை கிடைக்க வில்லை. ஏற்றுமதியாளர்கள் இங்கு நிறு வனங்களைத் தொடங்க வேண்டுமென் றால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடலோர மண்டல மேலாண்மை வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியுள் ளது. அதற்கு அதிக செலவும் செய்ய வேண்டி இருப்பதால், இங்கு ஏற்றுமதி நிறுவனங்கள் எதுவும் வருவதில்லை.
எனவே இந்த மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தி, சர்வதேச துறைமுகமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக கோரிக்கைவிடுத்து வருகிறோம். விஐபி தொகுதியான பிறகும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார்.
மீன் வியாபாரி கலா கூறும்போது, “இங்கு மீன் விற்கும் இடம், சுத்தம் செய்யும் இடம் எல்லாம் ஒரே இடத்தில் உள்ளது. இது மீன் வாங்க வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது” என்றார்.
மீன் சுத்தம் செய்யும் பெண் பிரேமா கூறும்போது, “நாங்கள் சுத்தம் செய்யும் மீன் கழிவுகள் முறையாக அகற்றப் படுவதில்லை. அதனால் அவை அழுகி, துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன” என்றார்.
இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த துறைமுக இடம் மத்திய அரசின் துறை முக பொறுப்புக் கழகத்துக்கு சொந்த மானது. எந்தப் பணிகளை செய்ய வேண்டு மென்றாலும், அவர்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால் தாமதம் ஏற்படுகிறது. அந்த இடத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரும் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்” என்றார்.