

ஓசூர் நகரில் உள்ள திரையரங்குகளின் கேன்டீன்களில் உள்ள உணவு பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூரில் வசிக்கும் லட்சுமி என்பவர் ‘தி இந்து’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஓசூர் நகரில் வட்டாட்சியர் அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ராயக்கோட்டை சாலை உட்பட 4 இடங்களில் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இந்த திரையரங்குகளில் இடைவேளை சமயத்தில் ஆண்கள் பகுதியில் பலரும் புகை பிடிக்கின்றனர். இடைவேளை முடிந்து கதவுகள் அடைக்கப்படுவதால் சிகரெட் புகை வெளியில் செல்ல வழியின்றி திரையரங்கு புகை மண்டலமாக மாறி விடுகிறது. இதனால் படம் பார்க்க திரையரங்கில் அமர்ந்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
படம் பார்க்க வருபவர்கள் சிகரெட் புகையுடன் கூடிய அசுத்தமான காற்றை சுவாசித்தபடியே படம் பார்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மேலும் திரையரங்கு கேன்டீன்களில் உள்ள பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். வெளியில் இருந்து எடுத்து வரும் தின்பண்டங்களை திரையரங்கின் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்காத நிலையில், திரையரங்கு கேன்டீன்களில் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஓசூர் நகர திரையரங்குகளில் புகை பிடிப்பதை தடை செய்யவும், கேன்டீன்களில் நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை,’’ என்றார்.