Published : 30 Jan 2014 06:00 PM
Last Updated : 30 Jan 2014 06:00 PM

வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்குகிறது தமிழக அரசு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் ரோசய்யா இன்று உரையாற்றும்போது, தமிழகத்தில் மனிதவள மேம்பாடு தொடர்பாக வெளியிட்ட தகவல்:

"மக்கள் தொகை விகிதாச்சாரத்தில், உழைக்கும் வயதுடையவர்கள் அதிக அளவில் உள்ள சாதகமான சூழலை நமது மாநிலம் தற்போது பெற்றுள்ளது என்பதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சாதகமான சூழல் வெகுகாலம் நிலைத்திருக்காது. எனவே, இச்சூழல் மாறுவதற்கு முன்பே, இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான, சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது.

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு பெறத் தகுதியுடைவர்களாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவர்களது திறன் அளவை மேம்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற தனிச்சிறப்புடைய முன்முயற்சி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் இது வழங்கும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நமது மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் ஆளுநர் ரோசய்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x