

‘யாதும் ஊரே’ திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் பொறுப்பை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்று அதன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: அகரம் ஃபவுண்டேசன், புதிய தலைமுறை குழுமம் மற்றும் ‘தி இந்து’ குழுமம் இணைந்து சென்னையில் நடத்திய ‘யாதும் ஊரே’ கருத்தரங்கம் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியாகவும், பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நம் வாழ்வில் பல சிறப்புகளும், ஏராளமான வெற்றிகளும் கிடைப்பது நிச்சயம். இளைய தலைமுறையினர் ஏராளமானோர் இணைந்துள்ள இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவடைய வேண்டும். தினமும் அரசின் செயல்பாடுகளை மட்டும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மக்களே களத்தில் இறங்கி, நம் ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்பட தயாராக வேண்டும். எங்களது ராம்ராஜ் காட்டன் நிறுவனம், அகரம் ஃபவுண்டேசனுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ‘யாதும் ஊரே’ திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை எங்கள் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இந்தத் திட்டத்தின் மூலம் வறட்சி மாவட்டமான திருப்பூரில், நீர்நிலைகள் அனைத்தையும் புனரமைத்து, பாதுகாக்க முடியும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.