மரண சோகமோ வறுமைத் துயரமோ எதுவும் தடையல்ல: பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருச்சி மாணவி

மரண சோகமோ வறுமைத் துயரமோ எதுவும் தடையல்ல: பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருச்சி மாணவி
Updated on
1 min read

கொடிய வறுமையிலும், தாயின் மரணத்துக்குப் பிறகு ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி 1,101 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்திருக்கிறார் திருச்சி மாணவி ஆஷிகா பேகம்.

மோர் விற்கும் அப்பா, நுரையீரல் புற்றுநோயால் இறந்துபோன அம்மா, கடும் பொருளாதார நெருக்கடி, அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி என குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு. இவை எதுவுமே ஆஷிகா பேகத்தைத் துவளச் செய்து விடவில்லை.

இக்கட்டான சூழலிலும் திருச்சி, மதுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் ஆஷிகா. தமிழில் 190, ஆங்கிலத்தில் 188, இயற்பியலில் 176, வேதியியலில் 190, உயிரியலில் 189, கணிதத்தில் 168 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 1,101 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்திருக்கிறார்.

மருத்துவராக ஆசை

ஆஷிகாவுக்கு மருத்துவராக வேண்டுமெனக் கனவு. நடிகர் சூர்யாவின் 'அகரம்' அறக்கட்டளையின் உதவியோடு, நீட் தேர்வுக்காக ஒரு மாதம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டு, நீட் தேர்வை எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஆஷிகா, ''நான் மருத்துவராக ஆசைப்படுகிறேன். எனக்கு சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை. தமிழ் வழியில் நான் தேர்வு எழுதி இருந்தாலும், நுழைவுத் தேர்வு கடினமாகவே இருந்தது.

என் அப்பாவும், அண்ணன்களும் என்னுடைய மேல் படிப்புக்குத் தேவைப்படும் தொகையை அளிக்க முடியுமா என்று தெரியவில்லை'' என்கிறார்.

''எப்படியாவது என் மகளின் உயர்கல்வியை மேற்கொள்ளச் செய்வேன்'' என்று உறுதியாகச் சொல்கிறார் அவரின் தந்தை அப்துல் ரஹீம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in