

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட களமான இடிந்தகரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து வீடுகள் தரைமட்டமாயின. இதில், 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இடிந்தகரையில், 800 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்துவருகிறது. இடிந்தகரைக்குள் நுழைந்தால் மோதல் வெடிக்கும் அபாயம் இருந்ததால், போலீசார் அதை தவிர்த்தனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே, இந்த மீனவ கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி மீனவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாக இருந்தது. இடிந்தகரையில் போராட்டம் நடைபெற்றுவந்த அதே நேரத்தில், கூத்தன்குழி கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி இடிந்தகரையிலுள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அங்குள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்ததாக இடிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் திணறல்... கூடங்குளம் தீயணைப்பு படையினர், தண்ணீர் லாரிகளுடன் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து போலீசார் ஊருக்குள் நுழைவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை குறித்த முழு விவரம் தெரியவில்லை. வெடிகுண்டு பின்னணி... கூத்தன்குழி கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பலர் அங்கிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவர்கள், தங்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தி எஸ்.பி. விஜயேந்திர பிதரியிடம் மனுக்கள் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, கூத்தன்குழி மீனவர் கிராமத்துக்குள், 2 ஆண்டுகளுக்குப்பின் போலீசார் சென்று முகாமிட்டனர். அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணலுக்குள் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அப்போது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் அவற்றை கைப்பற்றும் நடவடிக்கைகளில் போலீசார் உடனே இறங்கவில்லை. சமாதான கூட்டத்தின்போது, வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைப்பதாக கிராம பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்ததே இதற்கு காரணம். 2 கி.மீ. தூரத்தில் அணுமின் நிலையம் வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில்தான் அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.