

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர், ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை தொடர்பான சதித் திட்டத்தில் ஈடுபட்டு, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாதவர்கள் பற்றி விசாரிக்க பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை அமைக்கப்பட்டது. சி.பி.ஐ. அமைப்பின் கீழ் செயல்படும் இந்த முகமை தனது புலன் விசாரணையை சரிவர நடத்தவில்லை. இதனால் ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
ஆகவே, சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையாக புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதோடு அந்த புலன் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த மனு தடா வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி என்.தண்டபாணி முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிவதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யும் தகுதி பேரறிவாளனுக்கு இல்லை. ஆகவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.