

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக கூறப்படுகி றது. அப்பகுதியில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் மீது புகார் தெரிவித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதையடுத்து அதிமுகவில் பல்வேறு திருப்பங் கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமப்பகுதியில் கடற்கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இந்தத் தகவல் பரவியதை யடுத்து, அப்பகுதியில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் கிராம மக்கள் குவிந்தனர். இத னால், விடுதியுள்ள பகுதியில் யாருக் கும் அனுமதியில்லை எனக்கூறி அனைவரும் வெளியேற்றப்பட்ட னர். விடுதியில் தங்க வைக்கப்பட் டுள்ளதாக கூறப்படும் எம்எல்ஏக் களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தங்கியதாக கூறப்படுகிறது.
விடுதியில் இருந்த அமைச்சர்கள் அடிக்கடி வெளியே சென்று வந்தனர். அவர்கள் எங்கு சென்றனர் மற்றும் எதற்காக சென்றனர் என்ற தகவல்கள் தெரியவில்லை. பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.
வாக்குவாதம் செய்த இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த திண்டிவனம் அதிமுக துணை சேர்மன் ஷெரீப். |
இந்நிலையில், விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக் களிடம் பேரம் பேசப்படுவதாகவும், இதில் ஒரு சிலருக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. எனினும், எம்எல்ஏக்கள் யாரும் வெளியே வர முடியவில்லை என தெரிகிறது. விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காக, அப்பகுதியில் செல்போன் சிக்னல் ஜாமர் கருவி பயன்படுத்தப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், அதிகாலையில் இருந்து கிராம மக்கள் யாரையும் விடுதி அமைந்துள்ள சாலையில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. பத்திரிக்கையாளர்கள் மற்றும் வெளி நபர்கள் விடுதி பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக பாது காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாலை 6 மணியளவில் கிராமப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர், விடுதி அமைந்துள்ள சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர்களை சமாதானப்படுத்த அதிமுகவினர் சிலர் வந்தனர். இதில், திண்டிவனம் அதிமுக துணை சேர்மன் ஷெரீப், இளைஞர்களிடம் சமாதானம் பேசினார்.
அப்போது, பத்திரிக்கை யாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘எம்எல்ஏக்கள் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் விடுதியில் தங்கியுள்ளனர். இரவு 7 மணியளவில் அனைவரும் புறப்பட்டு சென்று விடுவார்கள். அதன்பிற்கு வழக்கம் போல் கிராம மக்கள் செல்லலாம் என தெரிவித்தார். பின்னர், திடீரென எம்எல்ஏக்கள் யாரும் விடுதியில் இல்லை. அதிமுகவினர் சிலர் சுற்றுலா வந்துள்ளதாக கூறிவிட்டு அங்கிருந்து விரைவாக புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, விடுதியில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மினி கன்டெய்னர் வாகனம் ஒன்று வந்து சென்றது. காலை 10 மணியளவில் மினி கண்டெய்னர் லாரி ஒன்று முழுவதும் தார்பாய் போர்த்திய நிலையில் சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாவலர்கள் யாரையும் அனு மதிக்காத காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டதோடு, கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.