Published : 26 Jan 2014 12:27 PM
Last Updated : 26 Jan 2014 12:27 PM

கடலூர்: ரூ.2 கோடி கையாடல்: வட்டாட்சியர்கள் கைது; கருவூல ஊழியர்கள் 14 பேருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்

சிதம்பரம் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் ஊழியர்களின் ஊதியப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய இரு வட்டாட்சியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சிதம்பரம் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் 2013-ம் ஆண்டிலிருந்து வட்டாட்சியராகப் பொறுப்பிலிருப்பவர் ராஜவேலு. அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் விமல், சம்பளக் கணக்கு தொடர்பான கோப்புகளை தயார்செய்து, ராஜவேலுவின் ஒப்புதலுக்கு வைத்துள்ளார். அதை ஆய்வு செய்த ராஜவேலு, ஊழியர்களுக்கான சம்பளத்தைக் காட்டிலும் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்து 380 கூடுதல் தொகை கோப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்து, விமலிடம் விசாரித்துள்ளார். அதோடு முந்தைய கோப்புகளையும் ஆய்வு செய்தபோது, பல மாதங்கள் கூடுதல் தொகை கணக்கிடப்பட்டு, சம்பளத்தொகை பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராஜவேலு, மாவட்ட ஆட்சியருக்கு மோசடி தொடர்பாக புகார் அறிக்கை அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆட்சியர் அலுவலக கணக்குப் பிரிவு நேர்முத உதவியாளர் விசாரணை நடத்தியதில் ரூ.1 கோடியே 60 லட்சம் கையாடல் நடத்திருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர், மோசடியில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில் இளநிலை உதவியாளர் விமல், இம்மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிதம்பரம் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் ஏற்கனவே வட்டாட்சியர்களாக பணிபுரிந்து, தற்போது சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்துவரும் ரங்கராஜன் மற்றும் சிதம்பரம் தேசிய நெடுஞ்

சாலை அலுவலக தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வரும் தில்லைகோவிந்தன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தில்லை கோவிந்தன் மற்றும் ரங்கராஜனை சனிக்கிழமை கைதுசெய்தனர்.

இது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி சேகரிடம் கேட்டபோது, “அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, அரசுப் பணத்தை கையாடல் செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இக்குற்றத்தில் கருவூல ஊழியர்கள் உட்பட 14 பேருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x