

தமது தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜயகாந்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துகொண்ட விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கூட்டணி குறித்து கேட்டதற்கு, "தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அது பாஜகவோ அல்லது காங்கிரஸோ... அவர்கள் எனது தலைமையை ஏற்க வேண்டும்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "டெல்லியில் வாழும் தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை உள்ளது. இவர்களை நாங்கள் சந்தித்த பிறகு மற்ற கட்சிகள் தமிழில் நோட்டீஸ் அடித்து பிரsசாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியம் அல்ல. இங்குள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களை எங்கள் கட்சிக்காரர்கள் சொல்லக் கேட்டு, தேமுதிக போட்டியிடுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தர நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இங்கு போட்டியிடுகிறோம்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே தமிழர்களுக்காக எந்த நல்ல காரியத்தையும் செய்யவில்லை.
ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என அங்குள்ள மக்களுக்கு தெரியும். அதுபற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை" என்றார் விஜய்காந்த்.