

வாணியம்பாடியில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலியாயினர்.
இதுகுறித்து, போலீஸார் கூறிய தாவது: வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அன்பு(32). ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர், நிம்மியம்பட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வாணியம் பாடி தர்கா அருகே ஆட்டோ சென்றபோது, ஒரு தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த வெப்பாளம்பட்டி கிராமத் தைச் சேர்ந்த முத்து(30), முருக வேல்(50), வேல்முருகன்(30), செக்குமேட்டைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பல்லவி(12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் அன்பு, பூவசரசன்(15), சிலம்பர சன்(12), கோகிலா(35), வைரமுத்து ஆகியோர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் அன்பு, வைரமுத்து, கோகிலா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்குச் செல்லும் வழியில் அன்பு உயிரிழந்தார்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட வெப்பாளம்பட்டி கிராம மக்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வாணியம்பாடி டிஎஸ்பி (பொறுப்பு) பிலிப் கென்னடி, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் ஆகியோர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். சாலையை அகலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர், சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் உதவியுடன் சாலையை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.