Published : 26 Jun 2017 09:01 AM
Last Updated : 26 Jun 2017 09:01 AM

அரசியல் கட்சித் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

அரசியல் கட்சித் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

திமுக மீது என்றும் அன்பும், பாசமும் கொண்ட சிறுபான்மையின மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களும், சிறப்பு சலுகைகளும் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில், எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி, திமுக என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

நபிகள் நாயகம் (ஸல்) வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவம், கல்வி, திருமணம், உணவு மற்றும் தொழில் தொடங்க என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது. இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும், சமத்துவமும், சமாதானமும் நிலைக்கவும், நீடித்துப் பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா சார்பிலும், கட்சியின் சார்பிலும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தவும், சகோதரத்துவத்துடன் வாழவும், மனித குலத்துக்கு வழி காட்டும் புனிதப் பெருநாள்தான் ரம்ஜான் பண்டிகை. இந்த இனிய நாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே, என்ற அடிப்படையில் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்க, அறம் தழைக்க, சமாதானம் நிலவ, சகோதரத்துவம் வளர வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ்கின்றனர். அன்பு ஒன்றே அனைவரையும் வெற்றிகொள்ளும் சூத்திரம் என்று நபிகள் கூறுகிறார். உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

பசியின் தன்மையைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

அனைவரும் ஒற்றுமையு டன், ஒன்றுபட்டு வாழவும், எல்லோரும் எல்லா வளங்களையும், நலங்களையும் பெறவும் இறைவன் அருள்புரிய வேண்டும். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:

வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்காத வகையில் மானுடத்தை வழிநடத்தும் இஸ்லாம், அனைத்துத் தரப்பினருக்குமிடையில் சமூக நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கிறது. இத்தகைய போற்றுதலுக்குரிய இஸ் லாம் நெறியைப் பின்பற்றும் யாவருக் கும் எமது இனிய ரம்ஜான் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்:

தண்ணீர் கூட பருகாமல் ஒரு மாதம் விரதமிருந்தோம். குடிக்கத் தண்ணீர் இன்றி வாடும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பாடுபடுவோம். மன இச்சைகளைக் கட்டுப்படுத்தி, மனத்தூய்மையுடன் ஒரு மாதத்தைக் கழித்தோம். அதே நிலையில் வாழும் நாள் எல்லாம் இருக்க இறையருளை வேண்டுவோம். எல்லோருக்கும் ஈத் முபாரக்.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவரும், வர்த்தகர் பிரிவு தலைவருமான எச்.வசந்தகுமார்:

ஈகைப் பெருநாளில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத் தும் இறைவனின் படைப்பே. ஓர் கொடியில் பூத்த பல மலர்களாய் நாம் மலர்வோம். பூக்களில் சிறந்த பூ என்றுமே அன்புதான். அந்த அன்பை சோனியாவின் தலைமையில் பகிர்வோம். இளந்தலைவர் ராகுல்காந்தி வழிகாட்டுதலில் உயர்வோம். தேசிய ரத்தத்தால் ஒன்றான நாம், உறவாலும் உணர்வாலும் ஒன்றாவோம்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், மதச்சார்பற்ற ஜனதா தள மாநில பொதுச் செயலர் க.ஜான்மோசஸ், பாப்புலர் ஃபிரண்ட் மாநில தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x