

ஆசிரியர் தகுதித் தேர்வு, சீருடைப் பணியாளர்கள் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை, அசோக்நகர், நூறடி சாலையில் இயங்கி வரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகம், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் சீருடைப் பணியாளர்கள் தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகள் ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்திட உள்ளது.
எனவே, போட்டித் தேர்வுகளில் பங்குபெற விரும்புவோர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ள சென்னைக்கு 9751669931, 9952860844 ஜெயங்கொண்டம் 9884920920 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.