

மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டாக்டர்கள் 11-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம், தூங்குதல், தெருக்கூத்து, ரத்தம் சிந்துதல் போன்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இடஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 11-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) வளாகத்தில் நேற்று 3-வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அமைப்பினர் கல்லூரி வளாகத்தில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கோரிக்கையை விளக்கி தெருக்கூத்து நடத்தினர். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ‘உதிரம் உதிர்த்து உரிமை மீட்பு’ என்ற போராட்டத்தை நடத்தினர். அப்போது 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குண்டூசியால் கை விரலில் குத்தி ஒரு சொட்டு ரத்தத்தை பேனரில் இருந்த கேள்விக்குறியில் வைத்தனர். டாக்டர்களின் தொடர் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ‘உதிரம் உதிர்த்து உரிமை மீட்பு’ என்ற போராட்டத்தை நடத்தினர்.