மலையில் சேகரிக்கப்படும் மூலிகைகளை மதிப்புக்கூட்டு பொருளாக்க அரசு உதவுமா?- பயிற்சி பெற காத்திருக்கும் மலைவாழ் மக்கள்

மலையில் சேகரிக்கப்படும் மூலிகைகளை மதிப்புக்கூட்டு பொருளாக்க அரசு உதவுமா?- பயிற்சி பெற காத்திருக்கும் மலைவாழ் மக்கள்
Updated on
2 min read

அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பல நாட்கள் தங்கியிருந்து சேகரித்து வரும் மூலிகைகள், தாவரங்கள் உள்ளிட்டவைகளை பதப்படுத்தி மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்ற தங்களுக்கு அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளனர் மலைவாழ் பழங்குடியின மக்கள்.

விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் ஏராளமான மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக, ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதியில் 35 பழங்குடியின குடும்பங்களும், செண்பகதோப்பு பகுதியில் 30 குடும்பங்களும், அத்திக்கோவில் பகுதியில் 16 குடும்பங்களும், ஜெயந்த்நகர் பகுதியில் 17 குடும் பங்களும், வள்ளியம்மாள் நகர் பகுதியில் 11 குடும்பங்களும், தாணிப்பாறை ராம்நகர் பகுதியில் 64 குடும்பங்களும் வசித்து வரு கின்றன.

இவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.34 ஆயிரம் மானியத்துடனும் ராம்கோ அறக்கட்டளை மூலம் ரூ.66 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்தில் 79 கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச மின் வசதியும் குடிநீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் 336 பேருக்கு இதுவரை சாதிச் சான்றிதழ்களும், 126 பேருக்கு குடும்ப அட்டைகளும், 128 பேருக்கு வாக்காளர் அடை யாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளன. மேலும், தமிழகத்தி லேயே எங்கும் இல்லாத வகையில் மாவட்டத்தில் உள்ள 395 பழங் குடியின மக்களுக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, பழங் குடியின நல வாரியம் அமைக்கப் பட்டு 161 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று, மூலிகைகள் உள்ளிட்ட அரிய வகை பொருள்களை எடுத்து வந்து விற்பனை செய்து பிழைக் கின்றனர். போதிய வருமானம் இல்லாததால் தங்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, தாணிப்பாறை அருகே உள்ள ராம்நகர் பகுதி யைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்களின் தலைவர் பெரியகருப்பன் கூறும்போது, “பல தலைமுறைகளாக காட்டில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். தற்போது ஊருக்குள் குடி புகுந்துள்ளோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையும் பிழைப்பும் வனத்தைச் சார்ந்துதான் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீஸனில் வனத்துக்குள் தேவையான உணவுப் பொருட்களுடன் குடும் பத்துடன் செல்வோம். அடர்ந்த வனத்துக்குள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை தங்கி இருந்து நெல்லி, பேப்புடல், இன்ட பட்டை, நன்னாரி வேர், சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான், சாம்பிராணி, தேன் உள்ளிட்டவைகளை எடுத்து வருவோம்.

எங்களிடம் சில தரகர்கள் வந்து மொத்தமாக இதை வாங்கிச் சென்றனர். தற்போது, நாங்களே விருதுநகரில் உள்ள குறிப்பிட்ட சில நாட்டு மருந்து கடைகளுக்குச் சென்று பொருள்களை கொடுத்து வருகிறோம். ஆனாலும், வன விலங்குகளுடன் வசித்து உயிரை பணயம் வைத்து சேகரித்து வரும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, வனப் பகுதியில் நாங்கள் சேகரித்து வரும் மூலிகைகள் உள்ளிட்ட வைகளைப் பதப்படுத்தி மதிப்புக் கூட்டு பொருளாக மாற்ற எங்களுக்கு அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் எங்களது வாழ்க்கைத் தரமும் உயரும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in