

திருமூர்த்தி, அமராவதி அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில், கடந்த 50 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண், மணல் பல மடங்கு தேங்கியுள்ளன. இதனால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை தேக்கிவைக்க முடியாமலும், விவசாயத்துக்கு தேவையான நீரை விநியோகிக்க முடியாத நிலையும் உள்ளது.
இதேபோல், அமராவதி அணையிலும் மணல், வண்டல் மண் அதிக அளவு தேங்கியுள்ளது. இதனால், ஆண்டுக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாகி வருவதாக தெரியவருகிறது. இங்கு தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றுவது குறித்த ஆய்வுக்காக மட்டும் ரூ.1.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வண்டல் மண்ணை அகற்ற பல கோடி செலவாகும் என, ஆய்வு மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விவசாயிகளே சொந்த செலவில் எடுத்துக்கொள்ள முன்வந்துள்ள நிலையிலும், அதற்கான அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் எஸ்.பரமசிவம் கூறும்போது, “அணைகள் தூர்வாரப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வண்டல் மண் விவசாயத்துக்கு மிகவும் ஏற்றது. அரசுக்கு செலவு இல்லாமல், அதனை விவசாயிகளே எடுத்துக்கொள்ள தயாராக உள்ளனர். அதற்குரிய அனுமதியை மட்டுமே விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அணைகள் கட்டப்பட்டபோது இருந்த பாசனப் பரப்பு, தற்போது பாதியாக சுருங்கிவிட்டது. இதே நிலை நீடித்தால், நீர் பற்றாக்குறையால் மேலும் பல மடங்கு குறையும். அதன் விளைவாக விவசாய நாடு என்ற நிலை மாறி, பஞ்சமும், பட்டினியும் நிறைந்த நாடாகவும், உணவு தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
ராமகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், மதிமுக மாவட்டச் செயலாளருமான ஆர்.டி.மாரியப்பன் கூறும்போது, “அமராவதி அணைக்கு உட்பட்டு 40 பாசன சங்கள் உள்ளன. வண்டல் மண்ணை அணையில் இருந்து எடுத்து வெளியே ஓரிடத்தில் குவித்துவிட்டால், அவற்றை விவசாயிகளே எடுத்துக் கொள்ளவும், தேவையான இடமும் அளிக்க விவசாயிகள் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால், ஒப்பந்ததாரர் மூலமாக விலைக்கு விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.
இதுகுறித்து திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் எம்.கிருஷ்ணன் கூறும்போது, “அணையில் 12.3 சதவீதம் வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனை அகற்ற ரூ.37 கோடி செலவாகும். அவற்றை கொட்டிவைக்க தேவையான இடம் தேவை. விவசாயிகளால் 0.25 சதவீத அளவுக்கு மட்டுமே எடுக்க முடியும். அணை பராமரிப்பு மட்டுமே எங்கள் வசம் உள்ளது. வண்டல் மண் எடுக்க ஆட்சியர் அனுமதி வேண்டும்” என்றார்.
அமராவதி அணை செயற்பொறியாளர் எம்.கொளந்தைசாமி கூறும்போது, ‘அணையில் 20 சதவீதம் வண்டல் மண் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான நீர் வள, மின் மற்றும் உள்கட்டமைப்பு ஆய்வு நிறுவனம், முதல் கட்டமாக அமராவதி மற்றும் வைகை அணைகளை தூர்வார்வதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளே எடுத்துக்கொள்ள கோரிய பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. விவசாயிகளே எடுப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. முன்பெல்லாம் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டவை தான். அனுமதியளிப்பது குறித்து ஆட்சியர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.