Published : 08 Mar 2017 12:07 PM
Last Updated : 08 Mar 2017 12:07 PM

கோடைகாலத்தில் தீவன பற்றாக்குறையை சமாளிக்க 500 விவசாயிகளுக்கு இலவச அகத்தி மரக்கன்று

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக 500 விவசாயிகளுக்கு இலவசமாக தலா ஐந்து அகத்தி மரக்கன்றுகளை சேலம் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படுகிறது என்று துறைத் தலைவர் முனைவர் து.ஜெயந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

சேலம் மாவட்டத்தில் ஆடு, மாடு கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கும் விதமாக பசுந்தீவனத்துக்கு மாற்றாக அகத்தி மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வறட்சி காரணமாக பசுந்தீவனங்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு வழக்கமாக வேலி மசால், கே-4 தீவனத்தட்டு, கே-எஃப்எஸ் 29 உள்ளிட்ட தீவன பயிர்கள் வளர தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் பசுந்தீவனத்துக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்து, மாற்று பசுந்தீவனத்தை ஊக்கப்படுத்த கால்நடை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பசுந்தீவனத்துக்கு மாற்றாக அகத்திக் கீரை மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அகத்திக் கீரை மரக்கன்று வீடுகளின் சுற்றுப்புறங்களில் வைப்பதன் மூலம் சமையல் அறை, குளியல் அறை கழிவு நீரே போதுமானதாக இருக்கும். இதற்காக தனியாக தண்ணீர் ஊற்ற பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டின் கொல்லைப்புறங்களில் அகத்திக் கீரை மரக்கன்றுகளை நடுவதன் மூலம் கோடை காலத்தில் விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு போதுமான தீவனங்களை அறுவடை செய்து, தீவன பற்றாகுறையை சமாளிக்க முடியும்.

ஆடுகளுக்கு போதுமான மேய்ச்சல் பகுதி உள்ளது. ஆனால், கறவை மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலப்பரப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதனால், அகத்திக் கீரை மரக்கன்று மூலம் மாடுகளின் தீவன தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 500 விவசாயிகளுக்கு தலா ஐந்து அகத்தி கீரை மரக்கன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த அகத்திக் கீரை மரக்கன்றுகளை விவசாயிகள் நாளை (9-ம் தேதி) ஒரு நாள் மட்டும், சேலம் பிரட்ஸ் ரோட்டில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வந்து இலவசமாக பெற்றுச் செல்லாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x