Published : 05 Jul 2016 02:06 PM
Last Updated : 05 Jul 2016 02:06 PM

புதுச்சேரி மாநிலத்துக்கு இடைத்தேர்தல் வரலாம்: மத்திய இணை அமைச்சர் ஆருடம்

புதுச்சேரி மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று காரைக்கால் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக, தேர்தலில் போட்டியிடாத ஒருவரை முதல்வர் பதவியில் காங்கிரஸ் கட்சி அமர்த்தியுள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் புதுச்சேரி மாநிலத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசின் ஆதரவுடன்தான் மாநில ஆட்சி நடைபெற முடியும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கட்சி மற்றும் அரசியல் பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவி செய்து வருகிறது.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். நெல்லுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. காரைக்கால்- பேரளம் இடையே அகல ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசுவேன்.

பஞ்சாயத்து அமைப்புகளை மத்திய அரசு கலைக்கத் திட்டமிட்டுள்ளதாக திமுக, பாமக கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளில் உண்மையில்லை. கிராமங்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துகளை இந்த கட்சிகள் தெரிவிக்கின்றன என்பது தெரியவில்லை.

சுவாதி கொலை போன்ற சம்பவங்கள் வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல. மாணவர்களுக்கு முன்பு இருந்ததுபோல பண்பட்ட, ஒழுக்கக் கல்வி பாடங்களையும் போதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் உளவியல் ரீதியான சிந்தனைகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினரிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x