Published : 19 Mar 2014 09:56 PM
Last Updated : 19 Mar 2014 09:56 PM

பாஜக மதவாத கட்சியா?- திமுகவுக்கு விஜயகாந்த் பதில்

பாஜகவை மதவாத கட்சி என்று திமுக விமர்சிப்பது சரியல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தில் பேசினார்.

திண்டுக்கல்லில் அவர் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது பேசியது:

"திண்டுக்கலில் அடிப்படை வசதிகளே இல்லை. அதிக வருவாய் ஈட்டித் தருவது பழனி கோயில். ஆனால், இங்கு அடிப்படை வசதிகளே இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே ஊழலற்ற ஆட்சி வர வேண்டும் என்றால், அது மோடி பிரதமரானால்தான் முடியும்.

தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு டார்கெட் நிர்ணயிக்கிறார்கள். குஜராத் முதல்வர் அதுபோல் டார்கெட்டால் நிர்ணயித்ததே இல்லை. எனவே, நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

திமுக, அதிமுக பிரச்சாரங்களைப் பாருங்கள். இருவரும் மாறி மாறி குற்றம்சுமத்திக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இரண்டு கட்சிகளுமே கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

மதவாதம் என்று சொல்கிறீர்களே. உங்கள் கொள்கை என்ன? கூட்டணி வைப்போம்; கொள்ளை அடிப்போம்; பங்கு பிரிப்போம் என்பதுதானே.

பாஜகவை மதவாதக் கட்சி, மதவாதக் கட்சி என்கிறீர்களே... அவர்கள் ஆட்சியில் தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தார்.

தண்ணீர்ப் பிரச்சினையில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் சுரண்டப்படுகிறது. அப்புறம் எப்படி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்? ஆனால், இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர், பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தக் குடிநீருக்கு அம்மா குடிநீர் என்று பெயர் வைக்கிறீர்களே? டாஸ்மாக்குக்கு அம்மா பெயர் வையுங்களேன்.

ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டியதே இப்போதைய நோக்கம். இரண்டு ஆண்டுகள் கழித்து, தமிழக மாற்றம் பற்றி பேசிக்கொள்ளலாம்.

மக்கள் விரோத சக்திக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அவர் ஆட்சிக்குதான் முடிவு கொண்டுவர வேண்டும். அதற்காக, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிக எப்போது மரியாதை கொடுக்கும். ஆனால், ஜெயலலிதாவோ கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி அணுகினார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x