

தமிழகத்தில் 125 இடங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.256 கோடி செலவில் புதிய பாலங்களைக் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொறியாளர் (நபார்ட் மற்றும் ஊரகச் சாலைகள்) 2013-14 ஆண்டில் ரூ.300 கோடி செலவில் 131 இடங்களில் பாலங்கள் கட்ட பரிந்துரை அனுப்பியிருந்தார். இதில் முதல்கட்டமாக ரூ.256 கோடி செலவில் 125 இடங்களில் பாலங்கள் கட்டவும், பின்னர், 2வது கட்டமாக ரூ.44 கோடி செலவில் 6 இடங்களில் பாலங்களைக் கட்டவும், ரூ.100 கோடி செலவில் 67 சாலைகளை அமைக்கவும் பரிந்துரை செய்திருந்தார்.
அவற்றை பரிசீலித்த அரசு, ரூ.256 கோடி செலவில் தமிழகத்தில் திருச்சி, தேனி, கோவை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களின் 125 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளித்து கடந்த 19-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் நபார்டு வங்கி 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் நிதி வழங்கவுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.