தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் நாளை வருகை: தேர்தல் பார்வையாளர்கள் 29-ல் தமிழகம் வருகிறார்கள்

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் நாளை வருகை: தேர்தல் பார்வையாளர்கள் 29-ல் தமிழகம் வருகிறார்கள்

Published on

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 32 கம்பெனி துணை ராணுவத்தினர் நாளை தமிழகம் வருகின்றனர். மேலும் தமிழகத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் வரும் 29-ம் தேதி வரவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 5-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, தேர்தல் துறையினரும் நிர்வாக ரீதியான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் நடத்தை விதிகளை கடுமையாக செயல்படுத்தவும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி, நாடு முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பிரத்தியேக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில், தொகுதியில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது, பதற்றம் நிறைந்த தொகுதிகளில் எப்படி பணியாற்றுவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பார்வையாளர்களை மாநில வாரியாக பிரித்து அனுப்பும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பொது பார்வையாளர் மற்றும் செலவு கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் வரும் 29-ம் தேதி வர உள்ளனர். அத்துடன், பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 32 கம்பெனி துணை ராணுவத்தினர் வியாழக்கிழமை வருகின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க செலவு கணக்குப் பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செலவுக் கணக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி) அதிகாரிகள், வரும் 29-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

ஒரு தொகுதிக்கு இருவர் வீதம் மொத்தம் 78 பேர் வர உள்ளனர். யார், எந்தத் தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிப்பர்.

மேலும் பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், ஏப்ரல் 5-ம் தேதி வருகிறார்கள். தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 பேர் வருகிறார்கள்.

மத்திய படையினர்

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக, 32 கம்பெனி துணை ராணுவத்தினர் 20-ம் தேதி (நாளை) வருவதாக தகவல் வந்துள்ளது. போக்குவரத்து காரணங்களால் ஓரிரு நாள் தாமதமாகவும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் வந்து சேர்ந்ததும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அடுத்தகட்டமாக, மேலும் 20 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வருவார்கள்.

இவ்வாறு தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in