Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

தி.மு.க. ரத்து செஞ்ச ஆணையைத் திரும்ப போடுங்க அம்மா! - முதல்வருக்கு ஒரு கிராமத்து மினி பஸ்ஸின் உருக்கக் கடிதம்

முதல்வர் அம்மாவுக்கு வணக்கமுங்க. மதராஸ்ல 50 குட்டி அரசு பஸ்களை விட்டு ஜமாய்ச்சிருக்கீங்க. சந்து பொந்துலயெல்லாம் அது சுலுவா போயி சனங்களை ஏத்தீ, எறக்கி விடறதைப் பார்த்து சனங்க ஏக சந்தோஷத்துல இருக்காங்க. சனங்க இதுக்கு தர்ற வரவேற்பைப் பார்த்து நீங்களும் இன்னும் 50 பஸ்சுகளை சிட்டியில விட்டுட்டு. மத்த மாவட்டங்கள்லயும் இதை அமல்படுத்தப் போறேன்னு அறிவிச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்ங்க.

இந்தக் கடுகடுப்புல ‘பச்சைக்கலரு பஸ்ஸூ; அதுல பொறிக்கலாமா இரட்டை இலை?’ன்னு டி.ராசேந்தர் கணக்கா சவுண்ட் உடறாங்க. கோர்ட்டுக்குப் போறாங்க. அம்மா உங்களுக்கு தெரியுமா? இப்ப இதை செய்யறவங்கதான் மஞ்சக்கலரு ஜிங்குச்சான்னு அப்ப எங்களுக்கு கலர் அடிச்சு விட்டவங்க. பின்னால நாங்க பச்சைக் கலருக்கு மாறினதும், உங்க ஆளுகன்னு தூக்கியும் எறிஞ்சாங்க. அதுக்காக ‘4 கி.மீ. தூரம் சலுகை காட்டி’ எங்களுக்காக நீங்க போட்ட முக்கிய அரசாணையை அடுத்த ஆட்சி வந்ததும் தூக்கியும் எறிஞ்சாங்க. அதுல இப்ப மூச்சுவிட முடியாம தவிச்சுட்டுத்தான் உங்ககிட்ட இப்ப இதை பேசிட்டும் இருக்கோம்.

‘யாருடா அது அரசாணைங்கறான்; பச்சைக்கலரு; மஞ்சக்கலருன்னு அரசியல் எல்லாம் பேசறான்னு பார்க்காதீங்க. நானும் குட்டி பஸ்தானுங்க. மதராஸ் சிட்டியைத் தவிர வேற மாவட்டங்கள்ல இப்பவும் ஓடியும் ஓடாம துவண்டு நிக்கிற குட்டி பஸ். புரட்சித்தலைவரு....வாத்தியாரு ஆட்சிதான் நான் கரு உருவான காலம்ன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரியோணும்ங்களா?

‘கிராமத்து சனங்க நகரத்துக்கு வர்றதுக்கு ரொம்பவும் சிரமப்படறாங்க. அவங்களுக்கு நாம ஏதாச்சும் செய்யோணும்!’ன்னு முதல்முதலா எண்பதுகள்ல திட்டத்தைக் கொண்டுவந்து ; 56 மினி பஸ்ஸிற்கு பர்மிட்டும் கொடுத்தாரு. பெரிய பஸ் முதலாளிக ‘நம்ம கலெக்சன்ல பாதிக்கும்!’ன்னு கோர்ட்டுக்கு சடக்குனு போய் பொசுக்குனு நிறுத்திப்புட்டாங்க.

அதைத்தான் பின்னால வந்த தி.மு.க ஆட்சி தூசி தட்டி எடுத்தது. ‘பெரிய பஸ் போகாத கிராமங்கள்ல, சந்து பொந்துகள்ல இந்த பஸ் 15 கி.மீ போகலாம்; பெரிய பஸ் போற ரூட்ல 1 கி.மீ தூரத்துக்கு மேல போகலாகாதுங்கற கண்டிசனோட 2000 பஸ்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. மதராஸ் பட்டணத்தை விட்டு மத்த ஊருகளுக்கு மட்டுந்தான் இந்த அனுமதி. கிராமத்துல இருந்து சிட்டிக்குள்ளே நுழையணும்ன்னா இந்த ஒரு கி.மீ தூரம் பெரிய பஸ் பாதை அனுமதி போதலை. அதனால எனக்குள்ளே ஏர்ற சனங்க குறிச்ச இடத்துல இறங்கி சிட்டி பஸ் ஸ்டேண்டுக்கு நடந்துதான் போறாங்க. அதை சரிசெய்ய பெரிய பஸ் தடத்தை கூடுதலா அலாட் செய்யணும்ன்னு கேட்டதுல மேலே 3 கி.மீ போட்டுக் கொடுத்தாங்க. கூடவே மறுபடி 5,000 பஸ்களுக்கு அனுமதி தந்தாங்க. ஆகமொத்தம் 7200 மினி பஸ்சுக.

அதுலயும் பிரச்சனைக. ரோடு மோசம், 4 கி.மீ பெரிய பஸ் போற பாதையும் போதலை. இதனால ஏற்பட்ட நஷ்டம். 3000 பஸ்சு காயலான் கடைக்கு போயிடுச்சு. மீதி பஸ்சுகளையாவது காப்பாத்த எங்க முதலாளிக எங்கலரு சிகப்பு மஞ்சளா இருந்தது கண்ணு உருத்துதோன்னு பச்சைக்கலருக்கு மாத்தினாங்க. அதிகாரிக, மந்திரிகன்னும் பார்த்தாங்க. அப்ப அம்மா உங்க ஆட்சிதான். கருணை வச்சு எங்களுக்கு வரிச்சலுகை தந்தீங்க. இன்னும் 4 கி.மீ. பெரிய பஸ் ரூட்ல ஓட்டிக்கலாம்ன்னு ஆணையும் போட்டீங்க. ஆனா எங்க போறாத நேரம் தேர்தல் வந்து சேர இந்த அரசு உத்தரவை நிப்பாட்டி வச்சாங்க அதிகாரிக. அடுத்த ஆட்சி அவங்க ஆட்சி. நீங்க போட்ட உத்திரவாச்சே. அதை கோர்ட்டுக்கே போய் ரத்து செஞ்சாங்க.

அதை செஞ்சது யாருங்கறீங்க. இப்ப இரட்டை இலைக்கு எதிரா கோர்ட்டுக்குப் போறாரே அதே இளவல்தான். ‘என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க?’ன்னு அவர்கிட்டவே நியாயம் கேட்டப்ப, ‘போன ஆட்சியில பச்சைக்கலருக்கு மாறினவங்க இல்லை நீங்கன்னு பசாரிச்சாரு பாருங்க. அதுக்குப்புறம் எல்லாம் போச்சு. எங்க ஓட்டம் பராமரிப்பு செலவுக்குக் கூட பத்தறதில்லை. அதுல இன்னும் பல பஸ் நின்னும் போச்சு. இப்பவும் அமைச்சர்க, அதிகாரிகன்னு நடக்கிறாங்க முதலாளிக. ‘2006 தேர்தல் நேரத்துல அம்மா போட்ட ஆணை; தி.மு.க. ரத்து செஞ்ச உத்தரவு அதை மட்டும் திரும்பப் போடுங்க!’ன்னு கெஞ்சறாங்க. இன்னும் விடியலை.

நீங்க இப்ப சென்னையில எங்களைப்போலவே அரசு குட்டி பஸ் விட்டதுல வந்த புதுநம்பிக்கை. இப்ப இப்படி உங்க காதுகளுக்கு எட்டட்டும்ன்னு அழறோம். அரசு குட்டி பஸ் விட்டது நகரத்து சனங்களுக்கு. நாங்க இருக்கிறது கிராமத்து சனங்களுக்கு. அதை யோசிச்சு, எங்களுக்கான பழைய உத்தரவை திரும்ப போடுங்க. எனக்குள்ளே ஜம்முனு உக்காந்துட்டு போற 6 லட்சம் கிராமத்து சனங்க கும்பிட்டுட்டு படுப்பாங்க. என்னங்கம்மா செய்வீங்களா?

- இப்படிக்கு கிராமத்து மினி பஸ்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x