

அரசு அதிகாரிகளின் தோற்றமும், பேச்சும் சாதாரண மக்களை அச்சம் அடையச் செய்யும் வகையில் இருக்கக் கூடாது. மக்களை அச்சுறுத் தாமல் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத் திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி, சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சி மையத்தின் புதிய கட்டிடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்துவைத் தார். விழாவில் அவர் பேசியதாவது:
சங்கர் ஐஏஎஸ் அகாடமி கடந்த 12 ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,500-க்கும் மேற்பட்ட குரூப் 1 அதிகாரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளை உருவாக்கியிருப்பது பாராட்டுக் குரியது. சிவில் சர்வீஸ் தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினா லும், கடினமாக உழைப்பவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள், புதிய வற்றை கற்கும் ஆர்வம் கொண்டவர் கள்தான் வெற்றி பெறுகின்றனர்.
அரசு அதிகாரி என்றாலே அதிகாரம் செய்பவர் என்ற நிலை தான் உள்ளது. இந்த மனப் பான்மை நீங்கவேண்டும். அரசு அதிகாரிகளின் தோற்றமும், பேச் சும், சாதாரண மக்களை அச்சம் அடையச் செய்யும் வகையில் இருக்கக் கூடாது. மக்களை அச்சுறுத் தாமல் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
நேர்மறை சிந்தனைகள்
விழாவில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வாழ்த்திப் பேசியதாவது:
குறைகளை சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் அடிப்படை கடமை. கூடவே தீர்வுகள், முன்னு தாரணங்களையும் சுட்டிக்காட்டி எழுதுவதை ‘தி இந்து’ கடமையாகக் கொண்டுள்ளது. பல இடங்களிலும் அதிகாரிகள் பல்வேறு நெருக்கடி களுக்கு மத்தியில், நேரம், காலம் பார்க்காமல், விளம்பரம் தேடாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்றனர். அதேநேரம், தாம் மக்களின் சேவகர்கள் என்று கருதா மல் அதிகாரத்தின் பிரதிநிதிகளாக நினைத்துக்கொண்டு மக்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளும் உள்ளனர். நாங்கள் பின்னவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, முன்னவர்களையும் உற்சாகப் படுத்தி எழுத வேண்டும் என்று நினைக்கிறோம். நேர்மறைச் சிந்தனைகள் மூலம் சமூக மாற்றத்தை யோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணைந்து செயல்பட தயார்
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசும்போது, ‘‘வெறும் செய்திப் பத்திரிகையாக அல்லாமல், பார்வைகளைத் தரும் அறிவியக் கமாகவே ‘தி இந்து’ செயல்படுகிறது. வெறும் ஏட்டுக் கல்வியை அல்லாமல், சுயமரி யாதைப் பார்வையைத் தரும் அமைப்பாக நம் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஆள்வதற்கான கனவு, திறனைப் பெறவேண்டும். அதற்காக உழைக்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்துடனும் கைகோத்துச் செயல்படத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவ சேனாபதி பேசும்போது, ‘‘கிராமப் புறங்களைச் சேர்ந்த பலரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக வேண்டும். அவர்கள் சிறப்பாக அரசுப் பணி ஆற்றுவார்கள்’’ என்றார்.
ஆண்டுக்கு 1,200 பேர் பயிற்சி
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சங்கர் கூறியதாவது:
ஐஏஎஸ் தேர்வுக்கான 3 வாய்ப்புகளும் முடிந்த நிலையில், 2004-ல் அண்ணா நகரில் செய்வதறியாது தவித்தேன். இதே அண்ணா நகரில் ஐஏஎஸ் அகாடமி ஆரம்பிக்க வேண்டும் என்று அப்போது தீர்மானித்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு 36 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அகாடமியில் தற்போது ஆண்டுக்கு 1,200 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற டெல்லி சென்று படிக்க வேண்டும் என்ற மாயை, மோகம் இருந்தது. அதை கஷ்டப்பட்டு மாற்றியுள்ளோம். இப்போது வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரில் இருந்துகூட மாணவர்கள் சென்னை வந்து படிக்கின்றனர். மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் ஆந்திர அரசின் ஃபெல்லோஷிப்புடன் ஆண்டுக்கு 70 முதல் 80 பேருக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம். திறமைமிக்க ஏழை மாணவர்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கிறோம். 2004-ம் ஆண்டுவாக்கில் ஐஏஎஸ் தேர்வில் தமிழகம் பின்தங்கியிருந்தது. அந்த நிலை மாறி 2006 முதல் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வெற்றி பெறுகின்றனர்.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக சேவைக் கட்டணத்தை நீக்கவேண்டும் அல்லது குறைக்கவேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் கிரீமிலேயர் குறித்த தெளிவு இல்லாததால் தமிழகத்தில் 6 பேர் உட்பட நாடு முழுவதும் 180 பேர் கடந்த ஆண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். கிரீமிலேயர் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் விழாவில் கவுரவிக்கப் பட்டனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் நினைவுப்பரிசு வழங்கினர். அகாடமி தலைமை செயல் அலுவலர் வைஷ்ணவி சங்கர், திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அகாடமி பயிற்றுநர் ரஜீதா நன்றி கூறினார்.