Published : 17 Sep 2016 01:07 PM
Last Updated : 17 Sep 2016 01:07 PM

தமிழர்களிடம் அடித்த கொள்ளைக்கு கர்நாடகா இழப்பீடு தரவேண்டும்: ராமதாஸ்

கர்நாடகத்தில் தமிழர்களின் உடைமை திட்டமிட்டே கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால் தமிழர்ளுக்கு கர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட கலவரம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடந்தது திட்டமிடப்பட்ட கொள்ளை என்றும், இதை நடத்தியவர்கள் கர்நாடக அரசின் ஆதரவு பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பெங்களூருவிலிருந்து வெளியாகும் 'விஜய் கர்நாடகா' என்ற முன்னணி நாளிதழ் இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை ஆயுதங்களுடன் பெங்களூரு வீதிகளில் வலம் வந்த கும்பல் தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நுழைந்து அங்கிருப்பவர்களை அச்சுறுத்தும் நோக்குடன் சில பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாகவும், அதன்பின் கடைகளை தீயிட்டு எரிக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்த ஆட்டோவை தீயிட்டு எரித்த கும்பல், அதன் உரிமையாளரிடம் பேரம் பேசி ரூ.2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, மற்ற பொருட்களை சேதப்படுத்தாமல் சென்றுள்ளது.

மற்றொரு நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதை உறுதி செய்வதற்கான வீடியோ பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையும், கலவரங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளையின் அங்கங்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

காவிரி சிக்கலை பயன்படுத்தி தமிழர்களின் உடைமைகளை கொள்ளையடித்ததை விட மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் தமிழருக்கு எதிரான கலவரத்தையும், கொள்ளைகளையும் கர்நாடக காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான்.

கலவரமும், வன்முறையும் தலைவிரித்தாடிய கடந்த 12-ஆம் தேதியன்று பெங்களூருவில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்கள் சட்டவிரோதமாக கூடுவதை இந்த ஆணை தடை செய்கிறது.

ஆனால், பெங்களூருவில் இந்த தடை ஆணை நடைமுறையில் இருந்த போது தான் சட்டவிரோதமாக கூடிய கும்பல் கொள்ளை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

கன்னட இனவெறிக் கும்பலின் வன்முறையை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

50-க்கும் மேற்பட்ட பேருந்துகளை எரித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடும் வரை காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கின்றனர். பேருந்துகள் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் தான் தீயவிப்பு நிலையம் உள்ளது என்ற போதிலும், அனைத்துப் பேரூந்துகளும் எரிந்து சாம்பலாகும் வரை ஒரு தீயவிப்பு வண்டி கூட வரவில்லை என்பதிலிருந்தே கலவரக்காரர்களுக்கும், கொள்ளையருக்கும் கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக துணை நின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இதற்கெல்லாம் மேலாக, காவிரிக் கலவரம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் மிகவும் கொடிய போக்கிலிகள் 600 பேரை கர்நாடக அரசு சிறைகளில் இருந்து விடுவித்திருக்கிறது என்ற உண்மையை இத்துடன் பொருத்திப் பார்க்கும் போது தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு கர்நாடக அரசே திட்டம் வகுத்துக் கொடுத்திருக்குமோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு மாநிலத்திலுள்ள மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியது அம்மாநில அரசின் அரசியலமைப்புச் சட்டப்படியான கடமை ஆகும். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு, அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தடுக்காததன் மூலம் கர்நாடக அரசு அதன் கடமையை செய்யத் தவறிவிட்டது. அதற்கான விலையை, அதாவது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவி மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பை, கர்நாடக அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் நடைபெற்ற கலவரங்களில் சேதப்படுத்தப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தமிழர் உடைமைகளின் மதிப்பை ஆய்வு செய்து நிர்ணயிக்க பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்.

கலவரத்தின் போது தாக்கப்பட்ட கர்நாடகத் தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்களை அழைத்து விசாரணை நடத்தி அவர்களுக்கு ஏற்பட்ட காயம், மன உளைச்சல், அவமானம் ஆகியவற்றுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பதை இந்த ஆணையம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

அந்த பரிந்துரைப்படி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீட்டை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதற்குத் தேவையான அரசியல் அழுத்தம் மற்றும் நெருக்கடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x