

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் எழுந்தருளி உள்ள சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழாவையொட்டி ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து வழிபட்டனர்.
திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தனூர்.
கல்விக் கடவுளான சரஸ்வதி அம்மன் தமிழகத்திலேயே தனியாக கோயில் கொண்டுள்ள தலம் இது. இவ்வூர் பழம்பெருமையும், சிறப்பும் வாய்ந்தது. சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு இவ்வூரை பரிசாக வழங்கியதால் இவ்வூர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் 8-ம் திருநாளான சரஸ்வதி பூஜையையொட்டி காலை சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்பாள் திருப்பாத தரிசனம், அதைத் தொடர்ந்து இரவு மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
விஜயதசமி விழாவையொட்டி நேற்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்து வந்து பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்டவைகளை வைத்து சரஸ்வதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏராளமான பெற்றோர் வழிபட்டனர்.
முதன் முதலாக பள்ளிக்குச் செல்லவுள்ள சிறு குழந்தைகளை கோயில் பிரகாரத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகளில் எழுத வைக்கும் நடைமுறையும் பல ஆண்டுகளாக இங்கு பின்பற்றப்படுகிறது.
இதற்கென தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் இக்கோயிலுக்கு வந்திருந்தனர்.
விஜயதசமி விழாவையொட்டி ருத்ராபிஷேகமும், இரவு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றன.