தினகரன் எதிர்ப்பு முடிவு பின்னணியில் பாஜக: நாஞ்சில் சம்பத்

தினகரன் எதிர்ப்பு முடிவு பின்னணியில் பாஜக: நாஞ்சில் சம்பத்
Updated on
1 min read

டிடிவி தினகரனை எதிர்ப்பதாக அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவுக்குப் பின்னணியில் பாஜக இருக்கிறது என அதிமுக அம்மா அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை எதிர்த்து அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவுக்குப் பின்னணியில் பாஜக இருக்கிறது. இன்று பிற்பகல் தலைமைக்கழகத்தில் நடைபெறும் கூட்டத்துக்குப் பின்னர் தினகரன் முக்கிய முடிவை அறிவிப்பார்.

இந்தக் கட்சிக்காக 33 ஆண்டுகாலம் அம்மாவின் நிழலாகத் தொடர்ந்த சின்னம்மாவின் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர் சிறையில் இருக்கும்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மனிதாபிமான உள்ளவர்கள் நெஞ்சை சுடுகிறது. இந்த முடிவை எடுக்க அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் நிச்சயம் பாஜக இருக்கிறது.

அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. பாஜகவுக்கு இந்தியா முழுவதும் தனது கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிமுகவை ஒழிக்க வேண்டும் என ஒரு யுத்தம் நடைபெறுகிறது. இப்போது நடைபெறும் இந்த யுத்தம் ஒரு கலாச்சார யுத்தம். இதில் இறுதி வெற்றி எங்களுக்கே.

தமிழகத்தில் வருமான வரித்துறையை ஏவி சோதனைகள் நடத்துகிறது பாஜக. வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளை கேடயமாக பயன்படுத்துகிறது பாஜக" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in