Published : 16 Feb 2017 05:01 PM
Last Updated : 16 Feb 2017 05:01 PM

ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக பதவியேற்பு; 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, வளர்மதி உள்ளிட்ட 30 அமைச்சர்கள் நான்கு பகுதிகளாக இருந்து பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி 20 நிமிடங்களில் நிறைவடைந்தது.

முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொடுத்து கொடுத்து ஆளுநர் வரவேற்றார்.

முன்னதாக, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை அவர் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த அமைச்சரவையில் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கே.பாண்டியராஜன் வகித்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்த உள்துறை, காவல், நிதி ஆகிய துறைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் முதல்வராக இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளும் தற்போது முதல்வர் பழனிசாமியிடமே உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் 3-வது முதல்வர் பதவியேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x