

மதுரையில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 78 பவுன் நகை திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கே.கே.நகர் ஏரிக்கரை தோட்டம் முதல் குறுக்குத் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரை தளத்தில் மேலூரில் நகைக்கடை நடத்தி வரும் கமலேந்திரன் என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, மனைவி சபிதா மற்றும் 2 மகன்களுடன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று காலை 7.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் பூஜை அறைக்கதவு திறந்து கிடந்தது. மேலும் அங்கு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 78 பவுன் நகைகளை காணவில்லையாம். இதுகுறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் ரேகை பதிவுகளை சேகரித்தனர். மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது திருட வந்த நபர் வீட்டின் முன்புறக் கதவு, ஜன்னல்களை உடைக்காமல் உள்ளே எப்படி வந்தார் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுபற்றி கமலேந்திரன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், நகைகள் திருட்டு போனதாக வழக்கு பதிவு செய்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறும்போது, ‘அடுக்குமாடி குடியிருப்பில் 15 வீடுகள் உள்ளன. காவலாளியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்புறக் கதவு இரவு பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் களும் உடைக்கப்படவில்லை. இந்நிலையில், நகைகள் திருடப் பட்டது எப்படி என விசாரித்து வருகிறோம் என்றனர்.