

'ஹூத்ஹூத்' புயல் காரணமாக புதுவை, கடலூர் துறைமுகங்களில் நேற்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அந்தமான் தீவு பகுதியில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் புதுவையில் சில நாட்களாக இரவில் நல்ல மழைபொழிவு உள்ளது. இதற்கிடையே, புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தற்போது, அது புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ‘ஹூத்ஹூத்’ என பெயர் சூட்டியுள்ளனர். புயல் காரணமாக நேற்று புதுச்சேரி கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. பிற்பகல் முதல் மேகமூட்டமாய் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலில் சீற்றம் இருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூர் துறைமுகத்திலும் வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள காரணத்தால் கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது