குழந்தைகள் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

குழந்தைகள் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்
Updated on
1 min read

குழந்தைகள், சிறுவர்களுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ஹெங்க் பெக்டேம் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ஹெங்க் பெக்டேம் நேற்று பார்வையிட்டார். மேலும், ஜப்பான் அரசின் ரூ.91 கோடி நிதியுதவியுடன் மருத்துவமனையில் ஏற்படுத்தப் பட்டுள்ள புதிய கட்டிடம், பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, மருத்துவ மனை இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ஹெங்க் பெக்டேம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தட்டம்மை-ரூபெல்லாவுக்கு போடப்படும் தடுப்பூசி நமது நாட்டின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து 100 நாடு களுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப் படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியை ஆய்வுசெய்து 100 சதவீதம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வழங்கியுள்ளது. தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். குழந்தைகள், சிறுவர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஹெங்க் பெக்டேம் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, “பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. யாரும் பன்றிக் காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். குழந்தைகள், சிறுவர் களுக்கு கண்டிப்பாக தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in