

அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான கட்டுமான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்கியிருப்பது, நடுத்தர வர்க்கத்தின் வீட்டுக் கனவை சிதைத்துவிடக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அடுக்குமாடி கட்டிடங்கள் தொடர்பான கட்டுமான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படுவதை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்தது. ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு, கட்டுமான மதிப்பில் 2 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பதிவு செய்வதன் மூலம் அடுக்குமாடி உரிமையாளர்களுக்கு சொத்து மீதான பதிவு பத்திரம் கிடைக்கும். இதன் மூலம் மோசடிகள் தடுக்கப்படும் என்பதால் இது வரவேற்கப் பட வேண்டிய ஒன்று தான்.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர்கள் ஏற்கனவே, தங்களுக்கு ஒதுக்கப்படும் பிரிக்கப்படாத நிலத்தின் மதிப்பில் 8 விழுக்காட்டை பதிவுக் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்நிலையில் கட்டுமான செலவின் மதிப்பில் 2 விழுக்காட்டை பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல., ரூ.15 லட்சம் நில மதிப்பும், ரூ. 35 லட்சம் கட்டட மதிப்பும் கொண்ட ஓர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர்கள் இதுவரை ரூ. 1.2 லட்சம் பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின் படி இனி கட்டுமானத்திற்கான பதிவுக் கட்டணமாக ரூ. 70 ஆயிரம் சேர்த்து ரூ. 1.9 லட்சம் செலுத்த வேண்டும்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வீட்டுக் கடன் மீதான வட்டி அதிகரிப்பு ஆகியவற்றால் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சாதாரண வீடுகளுக்குக் கூட கூடுதலாக சுமார் ரூ.1 லட்சம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை சிதைத்து விடும்.
எனவே, நடுத்தர வர்க்கத்தினரின் கனவு நனவாக வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் லாப நோக்கின்றி நியாய விலையில் வீடுகளைக் கட்டித்தர வேண்டும். அதோடு தனியார் நிறுவன வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட விழுக்காடு வீடுகளை அரசு ஒதுக்கீடாக பெற்று, பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.