Published : 27 Oct 2014 09:33 AM
Last Updated : 27 Oct 2014 09:33 AM

குன்னூரில் 2 நாட்கள் விசாரணை - விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு: தீர்ப்பாயத்தில் அரசு சாட்சியங்கள் பதிவு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பாய விசாரணையில் அரசு தரப்பு சாட்சியங்கள் நேற்று பதிவு செய்யப் பட்டன. எதிர் தரப்பு வாதங்கள் இன்று பதிவு செய்யப்படுகின்றன.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பாயம் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரணை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த இயக்கத்துக்கு தடை விதிக்கத் தேவையில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணி கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தீர்ப்பாய விசாரணை யில் எடுத்துக் கூறினர்.

இந்நிலையில், குன்னூர் நகர் மன்ற வளாகத்தில் தீர்ப்பாயத்தின் விசாரணை நேற்று தொடங்கியது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.மிட்டல் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

விசாரணை தொடங்கியதும் மதுரை குற்றப் பிரிவு துணை கண் காணிப்பாளர் ராஜாராம், ராமநாதபுரம் துணை கண்காணிப் பாளர் ஜெயசந்திரன் ஆகியோர் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

சாட்சியங்களின் வாதங்களைப் பதிவு செய்த நீதிபதி மிட்டல், எதிர்தரப்பு வாதங்கள் இன்றும் பதிவு செய்யப்படும் என்று கூறினார். இத்துடன் நேற்றைய விசாரணை முடிவடைந்தது.

விசாரணையின் போது, உளவுத் துறை கண்காணிப்பாளர் பவானி ஈஸ்வரி, அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் இருந்தனர்.

வைகோ உள்ளிட்டோரின் விவாதங்கள் இன்று பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த தீ்ர்ப்பாயத்தின் இறுதி விசாரணை டில்லியில் வரும் 30-ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.

விசாரணையை முன்னிட்டு நகர்மன்ற வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட் டுள்ளது. விசாரணை முடியும் வரை மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்மன்ற கூட்ட அரங்கில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீர்ப்பாய விசாரணை காரணமாக மவுண்ட் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டன.

வைகோ நம்பிக்கை

தீர்ப்பாய விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, `தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கியூ பிரிவு போலீஸார் ஒவ்வொரு முறையும் பொய் வழக்கு தொடுக்கிறார்கள். தமிழகத்தை பிரிவினைப்படுத்த முனைபவர்களை கைது செய்யலாம். விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x