Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

கால் இழந்தவருக்கு இழப்பீட்டை எந்திரத்தனமாக நிர்ணயிப்பதா? - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

விபத்தில் காலை இழந்தவருக்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதில் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் எந்திரத்தனமாக செயல்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ரூ.2.85 லட்சம் இழப்பீட்டை ரூ.14.94 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ஆர்.வெங்கடேஷ் (26). பத்தாம் வகுப்பு படிக்கும்போது கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்ததால் அவரது ஒரு கால் வெட்டி அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் தனக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தரக் கோரி சென்னையில் உள்ள வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தீர்ப்பாயம் விசாரணை நடத்தி ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 670 இழப்பீடாக வழங்க 2008-ல் உத்தரவிட்டது.

இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்ததால், உயர் நீதிமன்றத்தில் வெங்கடேஷ் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, இழப்பீட்டுத் தொகையை ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 170 ஆக உயர்த்தி சமீபத்தில் தீர்ப்பளித்தார்.அவர் தனது தீர்ப்பில், ‘‘விபத்தில் சிக்கியபோது வெங்கடேஷுக்கு வயது 16. செயற்கைக் கால்கூட பொருத்த இயலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வாழ்க்கை முழுக்க மற்றவர்களது உதவியுடன் மட்டுமே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் திருமண வாழ்க்கையும் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. எதிர்காலத்தில் பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டியவர், வாழ்க்கை முழுக்க அவர்களது ஆதரவில் வாழவேண்டியதாகிவிட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை பணத்தால் ஈடுசெய்ய முடியாது. எனினும், இழப்பீடாக பணம் கிடைத்தால் மற்றவர்களின் ஆதரவு தொடர்ந்து அவருக்கு கிடைக்க அது உதவியாக இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், எந்திரத்தனமாக தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பு ஏற்கும்படி இல்லை’’ என்று கூறியுள்ளார்.

உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.14.94 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x