

சென்னையைச் சேர்ந்த சி.எஸ். மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வி.ஜி.நாயுடு என்ற கோவிந்தசாமி நாயுடு வாடகைக்கு குடியிருந்து வந்தார். வாடகையை சரியாக செலுத்தாததால் மாசிலாமணி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்படி 77-ம் ஆண்டில் கோவிந்தசாமி நாயுடு வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கோவிந்தசாமி நாயுடு மதிக்காததால் அவர் வீட்டை காலி செய்துதரக்கோரி மாசிலாமணி மற்றொரு வழக்கை தொடர்ந்தார். 25.1.1978-ல் கோவிந்தசாமி நாயுடு அந்த வீட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் நாயுடு மதிக்கவில்லை. இதனால் மீண்டும் 1978-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த மாசிலாமணி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த உத்தரவு 1990-ல் உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த இடத்தை பஹல்ராஜ் கங்காராம் என்பவருக்கு மாசிலாமணி விற்பனை செய்தார். இதைத்தொடர்ந்து நாயுடு மற்றும் அவரது வாரிசுகளை அந்த இடத்தில் இருந்து காலி செய்து கொடுக்கக்கோரி கங்காராம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் கங்காராம் தன்னை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் முதலில் இருந்துதான் உரிமையியல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தி்ல் சீராய்வு மனுவை நாயுடு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஒரு வாடகைதாரர் எந்தளவுக்கு சட்டத்தின் துணை கொண்டு இடத்தி்ன் உரிமையாளரை பாடாய்படுத்த முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். வாடகைதாரரையும், அவர் மறைவுக்குப் பின் அவரது வாரிசுகளையும் வெளியேற்ற முடியாமல் கடந்த 40 ஆண்டுகளாக இடத்தின் முதல் உரிமையாளரும், இரண்டாவது உரிமையாளரும் போராடி வருகின்றனர். ஏமாற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களுக்கு ஒரு கருவியாக செயல்படும் சட்டங்களை சீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் வேண்டுமென்றே இந்த வழக்கை 40 ஆண்டுகளாக இழுத்தடித்த வாடகைதாரர் ரூ. 50 ஆயிரம் அபராதத்தை உரிமையாளருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் 15 நாட்களுக்குள் அந்த இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.