விளைச்சல் பாதிப்பால் சின்னவெங்காயம் கிலோ ரூ.125-ஐ தொட்டது: தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து இறக்குமதி

விளைச்சல் பாதிப்பால் சின்னவெங்காயம் கிலோ ரூ.125-ஐ தொட்டது: தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து இறக்குமதி
Updated on
1 min read

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, எந்த மாவட்டத்தில் இருந்தும் சின்ன வெங்காய வரத்து இல்லை என்பதால், கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை 125 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் வெங்காய சந்தையில், சந்தை நாட்களின்போது 4 ஆயிரம் மூட்டைகள் சின்னவெங்காயம் விற்பனைக்கு வரும். வறட்சி காரணமாக, தற்போது 800 மூட்டைகளே வருகின்றன. இவையும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.115-க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம், வெளி மார்க்கெட்டில் மக்கள் வாங்கும்போது கிலோ ரூ.125-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் வெங்காயம் என்பதே விவசாயிகளிடம் இல்லை. இனிமேல் மழை பெய்து விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டு, 80 நாட்களில் அறுவடைக்கு வந்தால்தான் தமிழக வெங்காயம் விற்பனைக்கு வரும். அதுவரை வெளி மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

தமிழகத்தில் விளைச்சல் இல்லை

தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளனர். பிற மாவட்டங்களில் மழை இல்லாததால் வெங்காயம் பயிரிடப்படவில்லை. மழை பெய்து தமிழக வெங்காய வரத்து ஏற்பட்டால்தான் விலை கணிசமாகக் குறையும்.

ஆந்திராவில் அறுவடை

தற்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து குறைந்த அளவே வருகிறது. இதனால்தான் விலையேற்றம். ஆந்திர மாநிலத்தில் வெங்காய அறுவடை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஆந்திர வெங்காயம் வர ஒரு மாதம் வரை ஆகும் என்பதால், தற்போதைய நிலையில் கர்நாடகா வெங்காய வரத்து குறையும்பட்சத்தில் விலை மேலும் அதிகரித்து ரூ.150 வரை செல்ல வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in