

தமிழகத்தில் சுருக்கமுறை வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகள் இன்று தொடங்கி ஒரு மாதம் நடக்கிறது. புதிய வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், மாநிலம் முழுவதும் இன்று தொடங்குகிறது. ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்யலாம். பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கும் மனு செய்யலாம்.
தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா, தங்களைப் பற்றிய விவரங்களில் பிழைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து வாக்காளர்கள் அறிந்துகொள்ள வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் புதன் கிழமை (இன்று) முதல் வைக்கப்படும்.
2.36 லட்சம் பேர் நீக்கம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 கோடியாக இருந்தது. அதன்பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் நடந்துவந்தன. இதில் 77,087 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 65,648 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பெயர் நீக்கத்துக்காக 10,389 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றையும் சேர்த்து மொத்தத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 901 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 5 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 34 வாக்காளர்கள் உள்ளனர் (பெண்கள்-2,74,47,173, ஆண்கள்-2,74,21,074, மற்றும் இதரர்-3,127).
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் தொடர்ந்து ஒரு மாதம் நடத்தப்படும். அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2 (தூத்துக்குடி மட்டும் நவ.1) ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். ஜனவரி 5-ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியாகும்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு ரேஷன் கார்டு, வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட் மற்றும் தற்போதைய காஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அட்டை போன்றவற்றை இருப்பிட ஆதாரமாகவும், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை வயதுச் சான்றுக்கும் தரவேண்டும். 25 வயதுக்கு குறைவானோருக்கு வயதுச்சான்று கட்டாயம். ஆன்லைன் மூலமாக மனு செய்தால், (elections.tn.gov.in/eregistration) எளிதாக இருக்கும்.
12 லட்சம் வண்ண அட்டை
வாக்காளர் அட்டையை தொலைத்தவர்கள் தாலுகா மற்றும் மண்டல அலுவலகங்களில் மனு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற முகாம்கள் நடக்காத நாட்களில் பெயர் சேர்க்க விரும்புவோர், வாக்குச்சாவடி களில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் மனு தரலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இனிமேல் புதிதாக பட்டியலில் சேர்க்கப்படுவோருக்கு வண்ண வாக்காளர் அட்டைகள் மட்டுமே விநியோகிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 12 லட்சம் பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ்-ல் தகவல்
செல்போனில் EPIC என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை குறிப்பிட்டு 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் வாக் காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.