கரையை கடந்தது மாதி புயல்: ராமேஸ்வரத்தில் படகுகள் சேதம்

கரையை கடந்தது மாதி புயல்: ராமேஸ்வரத்தில் படகுகள் சேதம்
Updated on
1 min read

மாதி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று அதிகாலை கரையை கடந்ததில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுக்குடன் ஒன்று மோதி 15-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன.

வங்கக்கடலில் உருவான மாதி புயல் வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

இதனால் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மீன்பிடித்துறைமுகத்தில் ஆழம் குறைந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 15-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இவற்றை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகுகள் சேதமடைந்தது குறித்து மீனவர் அருள்ராஜ் நமது செய்தியாளரிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் மீன்பிடித்தளத்தில் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதற்கேற்ற அடிப்படை வசதிகள் இல்லாதால் அடிக்கடி காற்றில் படகுகள் மோதி சேதமடைகிறது.

இன்று அதிகாலை மாதி புயலினால் வீசீய சூறைக்காற்றில் 15-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. மாதி புயல் கரையை கடப்பது பற்றி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவே இல்லை. இதனால் 15 மேற்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமைடந்து விட்டது. இவற்றை சரி செய்ய குறைந்தது ரூ.50 லட்சம் வரையிலும் செலவாகும் என்றார்.

மீனவர் எட்வின் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் மீன்பிடித்துறைமுகம் கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த படகுத்துறையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. ஒரு மின் விளக்குகள் கூட கிடையாது. படகுகள் கட்டுவதற்குரிய தூண்கள் எல்லாம் இடிந்து கடலுக்குள்ளே விழுந்து விட்டது.

மேலும் மீன்பிடித்தளத்தில் ஆழம் குறைவாக இருப்பதாலும் அடிக்கடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைகின்றன. எனவே அவற்றை ஆழப்படுத்த வேண்டும். மேலும் ராமேஸ்வரம் மீன்பிடித்தளத்தில் அதிகளவில் விசைப்படகுகளை கையாள்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in