

குமரி மாவட்டத்தில் தீபா பேரவையினரும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் தங்களது அணிக்கு வலு சேர்க்க பரபரப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால், சசிகலா அணியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சென்னையில் முகாமிட்டிருப்பதால் ஆதரவு திரட்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடக்கும் மோதல் சென்னை முதல் குமரி வரை அதிமுகவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக அமைப்பு ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. இதனால் வலு சேர்க்கும் பொருட்டு அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்தும் கூட சோபிக்க முடியவில்லை.
3 பிரிவுகளாக
தற்போது ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக விஜயகுமார் எம்.பி. உள்ளார். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக இங்கு படுதோல்வியை சந்தித்தது. விளவங்கோடு தொகுதியில் வைப்பு தொகையையே அக்கட்சி பறிகொடுத்தது.
குமரி மாவட்டத்தில் அதிமுக ஓ. பன்னீர் செல்வம் அணி, தீபா அணி, சசிகலா அணி என்று மூன்று பிரிவுகளாக உள்ளது. தீபா அணியினர் தங்களது தரப்புக்கு வலு சேர்க்க மாற்றுக் கட்சி யினரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலை யில் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க ஓபிஎஸ் அணியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இரு அணியினரும் பரபரப் பாக இயங்கும் நிலையில் சசிகலா ஆதரவாளர் கள் சென்னையிலேயே முடங்கி கிடப்பதால் ஆதரவு திரட்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீபா அணியில் தேமுதிக செயலாளர்
தீபா பேரவை நாகர்கோவில் நகர ஆதரவாளர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தேமுதிக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பேபி பொன்னையன் தீபா பேரவையில் இணைந்தார். இது குறித்து தீபா பேரவை ஆதரவாளர் சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘மேக்காமண்டபம், , குலசேகரம் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் கிளை திறப்பு விழா, வேர்கிளம்பியில் பேரூர் அலுவலகம் திறப்பு என நேற்று மட்டும் 6 நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதுவரை தீபா பேரவையில் 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளோம். ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்’’ என்றார் அவர்.
ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார்
பால்வளத்துறை தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கனவே சென்னை சென்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத்தும் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க வலியுறுத்தி நேற்று பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நாகர்கோவில் வேப்பமூட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு பால்வளத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், பூங்கா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர். தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை அவர்கள் பூர்த்தி செய்து வழங்கினர்.நேற்று மட்டும் 2 ஆயிரம் பேருக்கும் மேல் கையெழுத்திட்டுள்ள நிலையில் தொடர்ந்து முகாம் நடக்க உள்ளது.
சென்னையில் முகாம்
தீபா மற்றும் ஓபிஎஸ் அணியினர் பரபரப்பாக செயல்படும் நிலையில் சசிகலா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்பி ஆகியோர் தொடர்ந்து சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.
இதனால் பதிலடி கொடுக்க ஆள் இல்லாததால் சசிகலா ஆதரவு மனப்பான்மையில் இருக்கும் அதிமுகவினரை தீபா பேரவையினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சுலபமாக நெருங்கி தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.