

புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் க. மலைச்சாமி (39). சென்னையில் கணினி விற்பனை மையம் வைத்துள்ளார். தீபாவளிப்பண்டிகை கொண்டாட்டத்துக்காக மதுரையில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு காரில் குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று அங்கிருந்து அனைவரும் காரில் புறப்பட்டனர். மனைவி அனிதா(27), மகன் சரண்(4), இரு வார கைக்குழந்தை மற்றும் மாமியார் நாகேஸ்வரி(52) ஆகியோருடன் சென்னை நோக்கி காரை மலைச்சாமி ஓட்டி வந்தார்.
மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை பிரிவு சாலை அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. எதிர்திசையில் திருச்சியிலிருந்து விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
தகவலறிந்து வந்த விராலிமலை போலீஸார் காருக்குள் சிக்கியவர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்டனர். இதில் நாகேஸ்வரி, சரண் ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அனிதா உயிரிழந்தார். மலைச்சாமியும் அவரது கைக்குழந்தையும் ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.