

பேபி அணையை பலப்படுத்த கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வது தொடர்பாக பெரியாறு அணையை இடுக்கி ஆட்சியர் கோகுல் ஆய்வு செய்தார்.
முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அணையின் பராமரிப்பு, நீர்தேக்கம் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த மத்திய நீர்வளத்துறை அதிகாரி தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. மூவர் குழுவினர் பெரியாறு மற்றும் பேபி அணையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வல்லக்கடவு வழியாக அணைப்பகுதியில் மின்சாரம் கொண்டு வரவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், கேரள அரசு இதை கண்டுகொள்ளவில்லை.
பேபி அணையை பலப்படுத்த அதற்கு இடையூறாக உள்ள 23 மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி கேட்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் கடந்த 6 மாதம் முன்பு கடிதம் எழுதினர். ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் கோகுல் மற்றும் அம்மாநில வனத்துறை இணை இயக்குநர் கிஷன்குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தேக்கடி படகுத்துறை வழியாக பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கட்டுமானப் பொருட்களை வல்லக்கடவு வனத்துறை சோதனைச்சாவடி வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அணையை பலப்படுத்த வல்லக்கடவு வழியாக தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான லாரிகளில் கட்டுமானப் பொருட்கள் எடுத்து வர அனுமதி கேட்டு இடுக்கி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் இடுக்கி ஆட்சியர் அணையை பார்வையிட்டார். கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம் என்றார்.