Last Updated : 02 Jul, 2016 08:41 AM

 

Published : 02 Jul 2016 08:41 AM
Last Updated : 02 Jul 2016 08:41 AM

பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தகவல்

பாதுகாப்பை பலப்படுத்தும் நட வடிக்கையாக சென்னை முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

சென்னையில் குற்றங்கள் அதி கரித்துவிட்டதாக செய்திகள் வருகிறதே...

சென்னையில் கொலைகள் அதிகம் நடக்க ஆரம்பித்துவிட்டன, குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று தகவல்கள் வருகின்றன தான், ஆனால், அதில் உண்மை இல்லை. குடும்ப பிரச்சினைகள், திடீரென உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலைகள் போன்றவைதான் அடுத்தடுத்து நடந்துள்ளன. இதை போலீஸால் எப்படி தடுக்க முடியும்? இந்த சம்பவங்கள் அனைத்திலும் 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

சுவாதி கொலையாளியைப் பிடிப் பதில் ஏன் தாமதம்?

சுவாதி கொலை வழக்கில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும், கிடைத்த தகவல் களை வைத்து குற்ற வாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் அவரை கைது செய்வோம்.

சென்னை நகரின் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள் ஏதாவது உள்ளதா?

சென்னை நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்து பணிகளை அதிகரிக்கவும், அடிக்கடி வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதாவது பிரச்சினை நடப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தால் 2 நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு போலீஸ் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை எப்படி தடுப்பது?

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் ஏற்கெனவே கண்காணிப்பு பணி யில் இருப்பார்கள். ஆனாலும், கண்முன்னால் நடக்கும் குற்றங் களை பொதுமக்கள்தான் முத லில் தடுக்க வேண்டும். இதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற் பட்டால், உடனடியாக போலீஸார் உதவி செய்வார்கள்.

கூலிப்படை கொலைகள் அதி கரித்திருப்பது போல தெரிகிறதே...

இது முற்றிலும் தவறான தகவல். சென்னையில் கூலிப் படையே கிடையாது. தனிநபர் முன்விரோதத்தில் நண்பர்களே கொலை செய்த 2 சம்பவங்கள்தான் நடந்துள்ளன.

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க வழிகள் உள்ளதா?

செயின் பறிப்பு குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. செயின் பறிப்பு நடந்தால், குற்றவாளி தப்பிச் செல்லும் இடம் குறித்த தெளிவான தகவலை உடனடியாக கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தெரிவித்தால், குற்றவாளியை 90 சதவீதம் பிடித்துவிடலாம்.

கொள்ளை, திருட்டு சம்பவங்களை எப்படி தடுப்பது?

கொள்ளை சம்பவங்கள் கடந்த ஆண்டைவிட 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். வெளியூர் செல் லும்போது, அருகே உள்ள காவல் நிலையத்தில் தவறாமல் தகவல் சொல்ல வேண்டும். ரோந்து செல்லும் போலீஸார், அந்த வீட்டின் அருகே கூடுதல் கவனம் எடுத்து சோதனை செய்வார்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறு தகவல் சொல்வதே இல்லை.

காவல் நிலையங்களில் புகார் கள் வாங்கப்படுவதில்லை என் கிறார்களே...

வரும் அனைத்து புகார்களையும் வாங்கி சிஎஸ்ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புகார் வாங்க மறுத்தால் காவல் ஆணையர் அலுவலகத்தில் தக வல் தெரிவிக்கலாம்.

பொதுமக்களுக்கு ஏதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா?

போலீஸாருக்கு பொதுமக்கள் உதவி செய்தாலே 90 சதவீத குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், ‘நமக்கேன் வம்பு’ என பலர் ஒதுங்கிவிடுகின்றனர். இந்த எண்ணம் மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x