Published : 13 Jan 2014 07:30 PM
Last Updated : 13 Jan 2014 07:30 PM

விருதுநகர்: வடை மடிக்க வந்தது வாக்காளர் பட்டியல் காகிதங்கள்

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் காகிதங்கள் பேப்பர் பிளேட்டாக வடைகள், பலகாரங்கள் மடிப்பதற்காக விருதுநகரிலுள்ள டீக்கடைகளிலும், பேக்கரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்டு வாக்காளர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் முதன்முதலில் குடவோலை முறையைக் கொண்டுவந்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திய பெருமை மாமன்னர் ராஜராஜ சோழனைச் சேரும். அத்தகைய சிறப்புமிக்க பண்பாடு தமிழர் பண்பாடு. இன்றளவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் மக்களால் மக்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறைப்படியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

எவ்வித அமைப்புக்கும் கட்டுப்படாமல் தேர்தல் ஆணையம் செயல்படவும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த அரசியல் கட்சிகளுக்கும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து, அதன்படி செயல்பட வைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

நம்பகத்தன்மை

அத்தகைய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை நாடு முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகிறது. அதேபோல், தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 10-ம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு..

விருதுநகர் மாவட்டத்தில் 14.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பொதுவாக மாவட்டத் தேர்தல் பிரிவு அலுவலகத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்படும். அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி அளவிலும் வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இத்தகையே மதிப்புமிக்க வாக்காளர் பட்டியல் விருதுநகரிலுள்ள கடைகளில் வடை மடிக்கவும், கேக்குகள், ரொட்டிகளை வைத்து மடித்துக் கொடுப்பதற்கும் பேப்பர் பிளேட்டாகத் தயாரிக்கப்பட்டு டீக்கடைகளிலும், பேக்கரிகளிலும் அவமானப்பட்டு வருகிறது. பேப்பர் பிளேட்டுகளாகத் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் புகைப்படம், பெயர் மற்றும் விவரம் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன. இதைப் பார்த்து வாக்காளர்கள் பலர் முகம் சுழித்துச் செல்கின்றனர். அரசு அதிகாரிகள் சிலரின் அலட்சியம் காரணமாக இதுபோன்று நடைபெறும் தவறுகளை யாரும் தட்டிக்கேட்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் கேட்டபோது அவர் கூறியது:

ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இரு பிரதிகள் கொடுக்கப்படும். தேவைப்படுவோர் பணம் கட்டியும் வாக்காளர் பட்டியலைப் பெறலாம். பொதுவாக நாம் படித்த பழைய நோட்டுப் புத்தகங்களை விலைக்குப் போட்டுவிடுவதைப்போல முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலையும் சிலர் கடையில் போட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது, பேப்பர் பிளேட்டாக வந்துள்ள வாக்காளர் பட்டியலில் டிஎன்- 37 என்று இருப்பதால் அது திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தொகுதிக்கு உள்பட்ட வாக்காளர் பட்டியல் ஆகும். இருப்பினும், இதுகுறித்து தேர்தல் பிரிவு சிறப்பு வட்டாட்சியரை நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x