

நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்த கொல்கத்தா போலீஸார், அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் திணறிவருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து ஆந்திராவின் தடா உள்ளிட்ட பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்ல மேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் கடந்த 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவு, பேட்டியை வெளியிட ஊடகங்களுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள கர்ணன் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. அவர் சென்னை சென்றுவிட்டதாக தெரிந்ததும் தனிப்படை போலீஸார், சென்னை போலீஸாரை தொடர்பு கொண்டு நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று முன்தினம் காலை சென்னை வந்தார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், நிருபர்களை அழைத்து பேட்டியும் கொடுத்தார். இரவு வரை விருந்தினர் மாளிகையிலே தங்கியிருந்தார். நள்ளிரவில், தனது பிரத்யேக பாதுகாவலரைக்கூட வர வேண்டாம் என்று கூறிவிட்டு, தனியாக காரில் ஏறி வெளியே சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
போலீஸார் குவிப்பு
கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸார் வந்ததை யடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று காலை 30-க்கும் மேற் பட்ட போலீஸார் அங்கு குவிக்கப் பட்டனர். கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், பெருமாள், உதவி ஆணையர்கள் ஆரோக்கிய பிரகாசம், முத்தழகு மற்றும் போலீஸார் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அங்கு நீதிபதி கர்ணன் இல்லை என்பது தெரிந்ததும் திரும்பிச் சென்றுவிட்டனர். ஆனால், நீதிபதி கர்ணன் வந்தால் அவரை கைது செய்வதற்காக விருந்தினர் மாளிகை முன்பு போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிபதி கர்ணன் காளஹஸ்தி கோயிலுக்கு சென்றிருப்பதாக முதலில் தகவல் கிடைத்தது. இதனால், சென்னை வந்திருந்த கொல்கத்தா போலீஸார், நேற்று மதியம் 2.30 மணி அளவில் காரில் காளஹஸ்தி புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் செல்போன் சிக்னலை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என போலீஸார் விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு பகுதியில் கர்ணன் இருப்பதாக தகவல் கிடைத்ததால், 3 கார்களில் சென்னை போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 2 கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளும் சென்றனர். கர்ணனை கைது செய்ய ஆந்திர மாநில போலீஸாரின் உதவி யையும் நாடினர். கடைசியில் நீதிபதி கர்ணன் அங்கு இல்லாத தால் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர்.
கடலூரில் கைது?
மேலும், கர்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம். ஒருவேளை கர்ணன் கடலூருக்கு சென்றால் அங்கு வைத்தே அவரை கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் முகாமிட்டுள்ள கொல்கத்தா போலீஸார், கர்ணனை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.