

கழிவுநீரை நன்னீராக்கும் திட்டத்தின்படி ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்புத் திட்டம் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆகியவை பிச்சைக்காரன்பள்ளம், சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய ஓடைகள் மூலமாக காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் சுத்திகரிப்பு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. கழிவு நீரை நன்னீராக் கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை முதல்கட்டமாக தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடை நீரையும், குறிப்பிட்ட சாய ஆலைகளின் நீரையும் சுத்தம் செய்யும் வகையில் ஈரோடு சூளை பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் இதனை செயல்படுத்த இடத்தை தேர்வு செய்தனர். நேற்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார்.
பூமி பூஜையினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு எம்.பி., செல்வக்குமார சின்னையன், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மணிமாறன், சரவணகுமார், பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி, மாநகராட்சி உதவி ஆணையர் விஜயகுமார், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி, டெக்ஸ்டைல்ஸ் பிராச சர்ஸ் அசோசியேசன் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் முருகானந்தம், இணைச் செயலாளர்கள் சக்திவேல், வீரக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பணிகள் தொடக்கம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், இம்மாத இறுதிக்குள் பெங்களூரில் இருந்து சுத்திகரிப்பு கருவிகளை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகு தியில் தலா 1.20 லட்சம் லிட்டர் கழிவுநீரை தினசரி சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 யூனிட்டுகள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் முடித்து ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது’ என்றனர்.