

சொகுசு கார் இறக்குமதி முறைகேடு தொடர்பாக எம்.நடராஜன் மீதான வழக்கை துரிதப்படுத்தக் கோரி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இறுதி விசா ரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு
கடந்த 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட லக்சஸ் ரக சொகுசு காரை, 1993-ம் ஆண்டு தயாரித்ததுபோல போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடிக்கு மேல் சுங்கவரி இழப்பு ஏற்படுத்தியதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவ ரான எம்.நடராஜன், வி.பாஸ் கரன், லண்டனைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவானார். இதை யடுத்து மற்ற 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு நேற்று நடந்தது. அப்போது, வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.