

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவித்திருந்த 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறையின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓடுகின்றன. அதில் டிரைவர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர் மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் என சுமார் 3,600 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் கேட்டு வரும் 21-ம் தேதி இரவு 8 மணி முதல் 22-ம் தேதி இரவு 8 மணி வரை 24 மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் அறிவித்திருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.4,800 வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக சங்க பொதுச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.